எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும் -சீமான்

Default Image

பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டம், பணங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, பனங்குடியிலுள்ள 1 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி நிலையத்திற்குப் பதிலாக, 33 ஆயிரம் கோடி செலவில், 1,344 ஏக்கர் பரப்பளவில் ஆண்டொன்றுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி நிலையத்தை அமைக்க, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் எண்ணெய் நிறுவனம் முடிவெடுத்து அதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க நிலையத்திற்கு நிலம் வழங்கக்கூடாது என ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது ஏற்கனவே முடியாத கொடுஞ்செயலாகும்.

தற்போதுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையே மூட வேண்டும் எனப் பன்னெடுங்காலமாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அமையவுள்ள இப்புதிய விரிவாக்கத் திட்டத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டபோது தமிழகக் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஆலை விரிவாக்கத்திற்குக் கூடுதலாகத் தேவையான 725 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவ்வெதிர்ப்பு அலையையும், மக்களின் உணர்வுகளையும் முற்றாகப் புறந்தள்ளி நிலங்களையும், நிலத்தடிநீரையும் அடியோடு நாசப்படுத்தும் இந்தப் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்திருப்பது சனநாயகத் துரோகம்.

ஏற்கனவே, பனங்குடியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதுமுள்ள நிலம் மற்றும் நிலத்தடி நீரானது எரிவாயு கிணறுகளாலும் , எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களாலும் இராசாயனம் கலந்து மொத்தமாக மாசடைந்து நாசமாகிவிட்டது. சுத்திகரிப்பு கழிவுகளைக் கடல்நீரில் கலக்கவிடுவதால் இப்பகுதியில் மீன்வளம் குறைந்து மீனவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிக்கும் நீரும் , சுவாசிக்கும் காற்றும் சுத்திகரிப்பு ஆலை கழிவுகளால் நஞ்சாகி பல்வேறு கொடும் நோய்களை உருவாக்கி அதன் காரணமாக அப்பகுதியில் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகி வரும் வேளையில், தற்போது ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இதன் விரிவாக்கக் திட்டத்தைச் செயல்படுத்த முனைவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் படுபாதகச்செயலாகும்.

மேலும், இவ்வாலை விரிவாக்கமானது தமிழகச் சட்டமன்றத்தில் காவிரிச்சமவெளியைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் -2020 யைக் குலைப்பதாக அமையும் என்பதால், வேளாண் பாதுகாப்புச்சட்டம் – 2020 ன் கீழ் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கான பட்டியல் அட்டவணை 2 ல் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சார்ந்தப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளையும் சேர்க்க வேண்டும் எனக் கோருகிறேன்.

இத்தோடு, சூழலியல் மண்டலத்தைக் கெடுத்து, மக்களின் நல்வாழ்வினைப் பாதிக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு எவ்வித நிலமும் ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற மத்திய அரசிற்கு கடும் அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்