தந்தை ,மகன் கொலை வழக்கு – 3 காவலர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை
தந்தை ,மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 காவலர்களை சாத்தான்குளம் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளது சிபிஐ.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரணை நடத்தியது.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இரண்டாவதாக கைது செய்யப்பட்ட 3 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது. காவலர்கள் வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இதனையடுத்து ஆஜர்படுத்தப்பட்ட 3 காவலர்களும் சிபிஐ காவலில் செல்ல சம்மதம் தெரிவித்தனர்.எனவே வழக்கில் கைதான 3 காவலர்களுக்கு 23ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.இதனையடுத்து சிபிஐ நேற்று இரவு முதல் காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து 3 காவலர்களை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.இதனையடுத்து 3 காவலர்களையும் சாத்தான்குளம் அழைத்து சென்றுள்ளது சிபிஐ .