மியான்மரில் கல்வெட்டும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. 50 பேர் உயிரிழப்பு!
மியான்மரில் உள்ள கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மண் குவியல் தொழிலாளர்கள் மீது விழுந்தது. அந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கு மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
அந்த விபத்தில் இதுவரை 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்த நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறுகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கூறுகையில், அந்த பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.