ரயில்வே பணிமனைகளை மூட உத்தரவு: தென்னக ரயில்வே அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நோய் தொற்றின் காரணமாக அனைத்து ரயில்களையும் ரத்து செய்தது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தென்னக ரயில்வே உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது . கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, பெரம்பூரில் இயங்கி வரும் ரயில் பெட்டி தயாரிக்கும் பணிமனைகள், கோல்டன் ராக் பணிமனைகள் என மூன்று ரயில் பணிமனைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.