மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் மகா அன்னதானம்.!
- ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. பெருமளவில் கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். சிவனின் அருள் நிறைந்த இரவு என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா நாளை மாலை 6 மணி முதல் பிப்ரவரி 22-ம் தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இதில் தன்னை உணர்ந்த ஞானியும், யோகியுமான சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு பெருமளவில் கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மகா அன்னதானம் நடைபெறவுள்ளது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும்.
இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது. பண்டைய காலங்களில் ஆன்மிகம் நோக்கி நடையிடும் மக்களுக்காகவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னச்சத்திரங்கள் இருந்தன, அங்கு எந்நேரமும் பொது மக்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோவில்களில் செய்யப்படும் அன்னம், பிரசாதமாக வழங்கப்படுவதால் அந்த உணவு நம் உயிர்த்தன்மையில் அளப்பரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது என கூறப்படுகிறது.