பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்தும் பணம் செலுத்தாததால் பல மணி நேரம் முடங்கிய இணையதளம், டிவி…..
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ), உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகளும் இதன் இணையதளம், டிவி ஆகியவற்றின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல மணிநேரம் முடங்கியது.
கடந்த 2010-ம் ஆண்டிலேயே பிசிசிஐ அமைப்பால், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி நீக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் பெயரில்தான் பிசிசிஐ இணைதளமும், டிவியும் செயல்பட்டு வருகிறது. அவர் பணம் செலுத்தாததால் பிசிசிஐ இணையதளம் முடங்கியது.
ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி அவரை பதவியில் இருந்து பிசிசிஐ பொதுக்குழு கடந்த 2010-ம் ஆண்டு நீக்கியது. இதையடுத்து, லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஆனால், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவரை நீக்க முடியாமல் பிசிசிஐ திணறி வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யு-19 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றபின் அது குறித்த பல்வேறு தகவல்களை பிசிசிஐ பதிவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. பணம் செலுத்தாததால், இணையதளம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ வட்டாரங்களிடம் விசாரிக்கையில், ”பிசிசிஐ பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்ட லலித் மோடி பெயரில்தான் இன்னும் பிசிசிஐ இணையதளம் இயங்கி வருகிறது. இணையதளத்தின் புதுப்பிக்கும் காலம் இன்னும் ஓராண்டு இருந்தாலும், பணம் செலுத்தாததால், முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் லலித் மோடியின் கட்டுப்பாட்டில்தான் இணையதளம் இயங்கி வருகிறது. இதையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் லலித் மோடியின் அலுவலர்களை தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தபின், பணம் செலுத்தி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடந்த 2006-ம் ஆண்டு ரிஜிஸ்டர்.காம், நேம்ஜெட்.காம் ஆகிய இணையதளத்தில் இருந்து இந்த தளத்தை லலித் மோடி வாங்கினார். இன்னும் அவரின் பெயரில்தான் இணைதளம் இயங்கி வருகிறது. அவரை பிசிசிஐ நீக்கியபோதிலும், அவரிடம் இருந்து இணையதளத்தை மீட்க முடியவில்லை.
இணையதளத்தை மீட்பது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இணையதளம் உரிமம் லலித் மோடிக்கே சொந்தம் என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. பிசிசிஐ பெயரில் புதிதாக இணையதளம் தொடங்க வேண்டும் என்றால், ஏறக்குறைய பிசிசிஐ மற்றும் அதன் துணை பெயரில் 100 பெயர்களை லலித்மோடி வாங்கியுள்ளார். ஆதலால் எங்களுக்கு பிசிசிஐ பெயரில் புதிதாக எந்த தளமும் தொடங்கும் வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.