8 வழிச்சாலை வழக்கு : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.மேலும் நிலம் கையகப்படுத்தியதற்கு தடையும் விதித்திருந்தது.
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கினை இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.