மோடி, அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள்-மாயாவதி
மோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில், முக்கியமாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.இதனால் நாளை நிறைவடைய இருந்த பிரச்சாரங்கள் அனைத்தையும் இன்று இரவு பத்து மணியோடு முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள். இந்த பழிவாங்கும் செயல் ஒரு பிரதமருக்கு அழகல்ல என்றும் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தைமுடித்துக்கொள்ள உத்தரவிட்டதற்கு பதிலாக காலை 10 மணி முதல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள உத்தரவிட்டிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யமாட்டார்கள்.ஏனென்றால் இன்று பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.எனவே தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.