"பாஜக இல்லாத மாநிலம் அமைப்போம்" அரசு ஊழியர்கள் உறுதிமொழி..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மாநில அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் “பாஜக அல்லாத ராஜஸ்தானை அமைத்திடுவோம்” என்ற உறுதிமொழியுடன் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஊழியர்கள் இவ்வாறு தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் டிசம்பர் 7 அன்று நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள், தங்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஓய்வூதியப் பயன்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தார்கள். சாலைப் போக்குவரத்து ஊழியர்கள், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்திட வேண்டும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதுடன் மேலும் சிறந்த வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
எனினும், ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது என்று நன்கு தெரிந்தும், ராஜஸ்தான் மாநில அரசாங்கம் வேண்டும் என்றே தங்கள் கோரிக்கைகள் மீது உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுத்திட முன்வரவில்லை என்று போராடிய சங்கங்களின் தலைவர்கள் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து புதிதாக அமரவிருக்கம் அரசாங்கம் முடிவு செய்யும் என்றும், வேலை நிறுத்தக் காலம் அதீத விடுப்பாக (extraordinary leave) கருதப்படும் என்று அறிவித்திருப்பது, போராடிய ஊழியர்களை மேலும் ஆத்திரப்பட வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் மனோஜ் சாக்சனா திங்கள் அன்று செய்தியாளர்களிடையே கூறுகையில், போராடிய பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், அவர்தம் குடும்பத்தாரும் பாஜகவிற்க எதிராக வாக்களிப்பார்கள் என்றும், மக்கள் மத்தியில் எவ்வாறெல்லாம் பாஜக அரசு 2013ஆம் ஆண்டு தங்கள் தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளது என்று பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், “நாங்கள் பாஜக அல்லாத ராஜஸ்தானை அமைத்திட உறுதிமொழி எடுத்திருக்கிறோம்,” என்றும் கூறினார்.
DINASUVADU