மந்தமான நிலையில் பொறியியல் கலந்தாய்வு!:90 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை!!!

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றுவருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று,19-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது.
நேற்றைய கலந்தாய்வுக்காக 7,508 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 4,247 இடங்கள் நிரப்பப்பட்டன. 3,024 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. நேற்றைய கலந்தாய்வில் மட்டும் அழைப்பு விடுத்தவர்களில் 41.38 சதவிகிதம் பேர் பங்கேற்கவில்லை. 19 நாள்கள் முடிவில் 83,562 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக, 46,818 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.  அதிகபட்சமாக, மெக்கானிக்கல் படிப்பை 38,353 பேர் தேந்தெடுத்துள்ளனர். இ.சி.இ படிப்பை 33,900 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், தற்போதுவரை 91,894 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. அதேபோல, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால், தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் 50 சதவிகிதம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

Leave a Comment