குஜராத், அகமதாபாத் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கார் மோதி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத் – எஸ்ஜி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இரு லாரிகள் விபத்தில் சிக்கின. இதில் லாரி ஓட்டுநர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மீட்புப்பணிக்காக போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர் ஈடுபட்டனர்.
அந்த சமயம் அப்பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கவனிக்காமல் அதிகவேகத்துடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.