நவம்பர் 8 ஆம் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்க விசிக ஆதரவு…!

மோடி அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பு அழிப்பு முடிவை அறிவித்தது. அதன் முதலாண்டு நிறைவுநாளை கறுப்பு தினமாக கடைபிடிப்பது எனவும் மோடி அரசின் பணமதிப்பு அழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய பொருளாதார தோல்வி என மக்களுக்கு எடுத்துச் சொல்வது எனவும் தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதைப் போலவே இந்திய இடதுசாரிக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இந்த அறிவிப்பை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். எனவே, வரும் நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாகக் கடைபிடிக்க வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

மோடி அரசு பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையை அறிவித்த உடன் அது ‘பொருளாதார அவசர நிலை’ என முதலில் எதிர்ப்பு தெரிவித்தது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தான். அது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் என கூறியதோடு மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரைத் திரட்டிப் புதுச்சேரியில் மாநாடு ஒன்றையும் நடத்தினோம்.
பொருளாதார வல்லுனர்களும் ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி உள்ளிட்டோரும் மோடி அரசின் பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையானது, பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டு செல்லும் என்று எச்சரித்தனர். இதனால், உள்நாட்டு மொத்த வருவாயில் சுமார் 2% வீழ்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டினர். ஆனால் மோடி அரசு எதையும் கவனத்தில் கொள்ளவில்லை.

மோடி அரசின் அறிவிப்பால் தமது சொந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு அதை எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ரிசர்வ் வங்கியே இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று பிரதமர் மோடி ஆரவாரமாகப் பேசினார். ஆனால் கடந்த ஓராண்டில் கறுப்புப்பண முதலைகள் எவரையும் பாஜக அரசு கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ இல்லை. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை மாற்றித்தரும் சட்டவிரோத காரியத்தில் பாஜகவினர் பலர் ஈடுபட்ட செய்திகள்தான் வெளிவந்தன. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அரசின் பணமதிப்பு அழிப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்பது நிரூபணமாகியுள்ளது.

பொருளாதார சிந்தனையோ நாட்டு மக்கள் மீது அக்கறையோ இல்லாமல் கர்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி அரசு எடுத்த பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் தோல்விக்காகவும் அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியானதற்காகவும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மோடி அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் விரிவாக எடுத்துச்சொல்ல ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். என விசிக தலைவர் திருமாவளவன்  நவம்பர் 8 கறுப்பு தினத்திற்கு ஆதரவாக தனது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment