Uncategory
850 ‘குவார்ட்டர்’ பாட்டில்களை காரில் கடத்திய 3 பேர் அதிரடி கைது
செய்யாறு: சுதந்திர தினத்தன்று விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 850 குவார்ட்டர் மதுபான பாட்டில்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை சிலர் மொத்தமாக வாங்கி காரில் எடுத்து செல்வதாக செய்யாறு அடுத்த தூசி போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரவு சுமார் 10 மணியளவில் செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் பாண்டியம்பாக்கம் கூட்ரோடு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மிக வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் 850 குவார்ட்டர் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் உக்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(50), வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்த கோபால்(26), நாகராஜன்(29) என்பதும், இவர்கள் சுதந்திர தினத்தன்று உக்கல் கிராமத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய மதுபானத்தை கடத்தியதும், இவற்றை சித்தாத்தூர் மற்றும் வெம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் காருடன் 850 குவார்ட்டர் மதுபானத்தையும் பறிமுதல் செய்தனர்.
