8 மாதங்களுக்குப் பிறகு குரங்கணி மலைப்பகுதியில் மலையேற அனுமதி….!!

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்னதான் நவீனமடைந்தாலும் இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டேதான் செல்கிறது. நவீன யுகத்தின் மன அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, மனிதன் இயற்கையின் கைகளில் தஞ்சமடைகிறான். அதில் ஒன்றுதான் டிரெக்கிங் என்கிற மலையேற்றப் பயிற்சி. இந்த டிரெக்கிங் செல்வதற்கு கிராமப்புற இளைஞர்களைவிட நகர்ப்புற இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபட முடியும் என்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி தேனி மாவட்டம் குரங்கனி மலைபகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 22 பேர் பலியாயினர். சென்னை மற்றும் திருப்பூரை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 39 பேர் இரண்டு குழுக்களாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவத்தையடுத்து தமிழக அரசு வனப்பகுதிகளில் மலையேற்றம் செல்வதற்கு தடை விதித்ததுடன், இது தொடர்பாக விசாரிக்க வருவாய்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்தது.

அவர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் மலையேற்றத்துக்கான புதிய ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, தீ விபத்து ஏற்பட்ட குரங்கணி மலைப்பகுதிக்கு செல்ல பல்வேறு விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலையேற்றம் செல்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் செல்ல வேண்டும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது, முறையான பயிற்சி பெற்றவர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதேபோல், 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மலையேற்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அனுமதி மலையேற்றம் செல்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment