7 பேர் விடுதலை ! முதல்வருடன் வரத் திமுக எம்பிக்கள் தயார் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் கூறி – 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் நகமும் சதையும் போல் கூட்டணியாக இருக்கின்றன. 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். ஆகவே பா.ஜ.க.வும் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து – தொகுதிப் பங்கீட்டை முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவிக்கும் முன்பு, ஒரு நிபந்தனையாக, “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். கடந்த மூன்று தேர்தல்களில் நடத்திய அந்தப் பழைய நாடகத்தையே – இந்தத் தேர்தலிலும் நடத்தாமல் – ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மிஸ்டர் பழனிசாமி அவர்களே, எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டது; வேடம் கலைந்து உண்மைச் சொரூபம் வெளியே தெரிந்துவிட்டது; நாடகம் முடிந்துவிட்டது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.