7.5 % உள்ஒதுக்கீடு ! ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.ஜெய்சுகின் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு அடுத்த வாரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.