ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கின் பிரதமர் இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் மேலாளரை சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டதாகவும், இந்த மருத்துவமனையில் 70 படுக்கைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட பொழுது இந்த அறையில் 63 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில், 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்து உள்ளனர்.  மீட்பு குழுவினர் தீவிரமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தீ அதிக பகுதிகளில் பரவியுள்ளதால் மீட்பு குழுவினருக்கு சிரமம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal