கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து!

கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக அரசால் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அப்போது மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன்பின் கடந்த அதிமுக அரசால், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அதன்படி, சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்களின் மீதான அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசால் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்