Uncategory
தினகரனிடம் 50 எம்.எல்.ஏக்கள்- உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் டெல்லி!
டெல்லி: தினகரனிடன் குறைந்தபட்சம் 50 எம்.எல்.ஏக்கள் இருப்பது உறுதி என உளவுத்துறை அறிக்கை டெல்லியை அதிர வைத்துள்ளது. இதையடுத்து அதிமுக தொடர்பான வியூகத்தை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதில் டெல்லி படுதீவிரம் காட்டியது. ஒரு கட்டத்தில் சசிகலா கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முயற்சித்தார்.
ஆனால் டெல்லி மிகக் கடுமையாகவே இதை எதிர்த்தது. அப்போது சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிறைக்கு செல்ல்ல நேரிட்டது.
தினகரன்
இதனையடுத்து தினகரன் தலையெடுக்க தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டார். இதையும் டெல்லி ரசிக்கவில்லை. ஒருகட்டத்தில் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறைக்கு செல்ல நேரிட்டது.
எடப்பாடி தரப்பு
சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்த நிலையில் டெல்லி ஆணைப்படி எடப்பாடி தரப்பு தம்மை வலிமையாக்கிக் கொண்டது. இப்போது தினகரன் தரப்பு எடப்பாடி தரப்புக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு?
அதேநேரம் தினகரன் தரப்புக்கு அதிகபட்சம் 20 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள் என கணக்குப் போட்டது டெல்லி. ஆனால் குறைந்தபட்சம் 50 எம்.எல்.ஏக்கள் சசிகலா குடும்பத்தின் அதி தீவிர விசுவாசிகள் என்கிறது உளவுத்துறையின் தற்போதைய அறிக்கை.
அதிரும் டெல்லி
இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போனதாம் டெல்லி. இவ்வளவு பேர் சசிகலா குடும்பத்தை உறுதியாக ஆதரிப்பார்கள் என தெரிந்திருந்தால் வேறு மாதிரி வியூகம் வகுத்திருக்கலாமோ என தடுமாறுகிறதாம் டெல்லி.
