4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி:டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும்,அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும்,மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில்,ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே இன்று 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியுள்ளது.இதில்,டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அதன்படி,அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.தற்போது,12.3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பு இல்லாமல் ஆஸ்திரேலியா அணி 30 ரன்கள் எடுத்துள்ளது.இந்த நிலையில்,தற்போது மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில்,மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் ஓலி ராபின்சன் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.இதனால் ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):ஹசீப் ஹமீத், ஜாக் கிராலி, டேவிட் மாலன், ஜோ ரூட்(c), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர்(wk), மார்க் வூட், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(wk), பாட் கம்மின்ஸ்(c),மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.