டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த முகமதுஜாவித் அக்தர்(27) என்பவருக்கு, கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி சேர்க்கப்பட்டார். இவருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது ஜாவித் அக்தர் செவ்வாயன்று உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக செவ்வாயன்று 125 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். இவர்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்கான டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் 25 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சங்கராபுரம் அசோக்நகரை சேர்ந்தவர் முருகேசன் (43). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது தாயார் மற்றும் மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் ஊருக்கு வந்தார்.வந்த இடத்தில், முருகேசனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்படவே, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. உடல்நிலை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அடுத்ததாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று அதிகாலை முருகேசன் உயிரிழந்தார்.

மாணவி பலி:
நாமக்கல் மாவட்டம்  பள்ளிபாளையம் அடுத்துள்ள மேற்கு தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் கேசினி(13), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கேசினி, கோவை அரசு மருத்துவமனையில் செவ்வாயன்று காலை இறந்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment