மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களான குழந்தை இறப்பு.!

கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் அகர்டலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, பெண்ணிற்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கேள்வி எழுப்ப, மருத்துவர்களோ குழந்தை நலமுடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

அதனையடுத்த சில மணி நேரங்களில் குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று விட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண் தனது குழந்தையின் மரணம் குறித்த விசாரணையை போலீசாரிடம் கேட்க விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர். கொரோனா பரிசோதனைக்காக அலட்சியமாக செயல்பட்டு மாதிரிகள் எடுத்ததால் பிறந்து 3 நாட்களேயான குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது