,

2-வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.!

By

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் பிறகு நிலைத்து நின்று ஆடி, நல்ல ஸ்கோரை எடுத்தது. 50 வர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 333 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத்கவுர் அபாரமாக ஆடி 111 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ஹர்லீன் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் சேர்த்தனர்.

334 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கம் முதலே விக்கெட்கள் சரிந்த விதம் இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணி 245 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேனியல் வியாட் 65 ரன்களும், அலைஸ் கேப்சி மற்றும் எமி ஜோன்ஸ் தலா 39 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் ரேனுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை சாய்த்தார்.

இதன்மூலம் இறுதியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று தொடரையும் வென்றது.