தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை- தமிழக அரசு ..!

தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் இதயங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அவற்றில், காப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் என தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே.

இதுபோன்று ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan