22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – பள்ளிக்கல்வித்துறை தகவல்

கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுறுத்தலை வழங்கினர். அதில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவலையும் அதிகாரிகள் வெளியிட்டனர். அதில், தமிழகத்தில், 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும் உள்ளனர். 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும் உள்ளனர். 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்கள் பயில்கின்றனர் 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன.

ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 22 என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை உள்ளது என்றும் 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளனர் எனவும் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும் உள்ளனர் என ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்டனர்.

இதனிடையே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்களும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 1,95,292 மாணவர்களும் என மொத்தம் 6,79,467 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தரும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment