சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் புதிய சோமஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகளை, உலோகங்களை கண்டறியும் கருவி மூலமாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலில், சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகளை புதியதாக செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன பழைய சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பல நூறு ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்பட்ட வந்த சோமஸ்கந்தர் சிலையை, கடந்த 2015ஆம் ஆண்டு பார்வையிட்ட தலைமை ஸ்தபதி முத்தையா, அதனை மாற்றிவிட்டு புதிய சிலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், சிலைகள் செய்வதற்காக, தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவை பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய சிலைகள், 2015ஆம் ஆண்டு இறுதியில் நிறுவப்பட்டன… அதில், ஐந்தே முக்கால் கிலோ தங்கம் இருப்பதாக, ஸ்தபதி முத்தையா தரப்பினரால் அப்போது கூறப்பட்டது. இருப்பினும், பழைய சிலையை அகற்றும்போதும், புதிய சிலை அமைக்கும் போதும், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ரசீது உள்ளிட்ட எந்த பதிவுகளும் இன்றி, தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை பெறப்பட்டதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்… இதையெல்லாம் புறந்தள்ளிய கோவில் நிர்வாகம், ஸ்தபதி முத்தையாவோடு சேர்ந்து கொண்டு, புதிய சிலையை நிறுவதிலேயே, அக்கறை காட்டியுள்ளது. இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், வழக்குப்பதிவு செய்யப்படாததால், கடும் அதிருப்தி அடைந்த பக்தர்கள், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கடந்தாண்டு இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் சோமஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் முறைகேடு வழக்கை, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, தனது குழுவினருடன் களமிறங்கிய ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் விசாரணையில், திடுக்கிட வைக்கும் பல தகவல்கள் தெரியவந்தன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர், புதிய சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், புதிய சிலை செய்வதற்காக, 100 கிலோ அளவிற்கு, பக்தர்கள், பொதுமக்களிடம் இருந்து, தங்கத்தை பெற்றிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், தலைமை அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், வியாழக்கிழமையன்று, ஏகாம்பரநாதர் கோவிலில் முகாமிட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, உலோகங்களை கண்டறியும் கருவி மூலமாக, புதிய சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்…. இந்த ஆய்வு வெள்ளிக்கிழமையும் தொடர உள்ளது. மேலும், புதிய சிலைகள் செய்யப்படும் முன் இருந்த பழங்கால சிலைகளின் எண்ணிக்கை குறித்தும், அதற்கு பிறகான காலக்கட்டங்களில், கோவிலில் இருந்த சிலைகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதுதவிர, ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சோமஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலியின் பழைய சிலைகள் கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியத்திற்கு விற்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாகவும் விசாரித்து வரும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், அமைச்சருடன் இணைந்து, பழைய சிலைகளை மீட்க, ஆஸ்திரேலியா நாட்டின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.

இதில் சுமூக முடிவு எட்ட முயற்சி நடைபெற்றிருப்பதை அடுத்தே, ஏகாம்பரநாதர் திருக்கோவிலில், புதிய சிலைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் பணியும், காணாமல் போகச் செய்யப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை குறித்தான ஆய்வும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.