வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 90விழுக்காடு மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் ஐம்பது கோடி ரூபாய் செலவில் ஆயிரம் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தார். சிறுதானியங்களின் உற்பத்தியை உயர்த்த 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

வாழை பயிரிடும் நிலத்தில் நுண்ணீர்ப் பாசன முறை அமைக்க விவசாயிகளுக்கு 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தோட்டக்கலை ஆராய்ச்சி பயிற்சி மையம், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் ஆகியவற்றில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்படும் என்றும், இவ்விரண்டு மையங்களிலும், கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

9 வட்டாரங்களில் 18 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி எனும் புதிய பூங்கா 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். நீலகிரியில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் 3கோடி ரூபாய் செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கைத்தறித் துறை சார்பில் கோவை கொடிசியா அரங்கில் 2கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.