மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடைவதை முன்னிட்டு, கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்க ளின் இனப்பெருக்கம் அதிகள வில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, வங்கக் கடலில் விசைப் படகுகளில் மீன்பிடித்தால் மீன்குஞ்சுகள் வலையில் சிக்கி அழி யும் என்பதால், கடந்த 2000-ம் ஆண்டு முதலாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இத்தடைக்காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற்பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடைக்காலம் நாளை (14-ம் தேதி) நள்ளிரவுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சென்னை காசிமேட்டில் மட்டும் 1,200 விசைப் படகுகள் உள்ளன. தடைக்காலம் முடிவதை முன்னிட்டு, மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகளுக்கு மராமத்து பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடலுக்குள் செல்வதற்குத் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வாங்கி சேகரித்து வருகின்றனர். காசிமேட்டில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு, பகலாக ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களையும் மீனவர்கள் வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்வார்கள். இதில், அண்மைக் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் ஓரிரு நாட்களில் கரை திரும்புவர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும். எனவே, அடுத்தவாரம் முதல் மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.