பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, சாகுபடி செய்து மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைக்கண்ணு கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ‘எம்ஜிஆர் 100’ என்ற புதிய உயர்விளைச்சல் சன்ன ரக நெல், ரூ.1 கோடியே 19 லட்சத்தில் பிரபலப்படுத்தப்படும்.

மண் வளத்தை மேம்படுத்த 50 ஆயிரம் ஏக்கரில் ரூ.3 கோடியில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, ரூ.5 கோடியில் முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மை பரவலாக்கப்படும்.

தரமான விதைகளின் தேவையை பூர்த்தி செய்ய 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு, சேமிப்பு கிடங்கு வசதி ரூ.6 கோடியில் 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, சாகுபடி செய்து மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்’ விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரமும் வழங்கி கவுரவிக்கப்படும்.

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பழக்கன்றுகள் பரிசளிப்பதை ஊக்குவிக்கவும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.5 கோடி செலவில் தரமான பழ மரக்கன்றுகளும், இதர கன்றுகளும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும்.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதுடன், ஆண்டு முழுவதும் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. எனவே, நடப்பாண்டில் தனித்துவம் வாய்ந்த பழங்கள், காய் கறிகள், வாசனைப் பயிர்கள், மலைப்பயிர்கள், நறுமணப் பயிர்கள் சாகுபடி, ரூ.34 கோடி செலவில் 44,250 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.