காஞ்சியில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறிஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் நடந்தது. பலத்த எதிர்ப்பினையொட்டி போலீஸாரின் பாதுகாப்புடன் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மே 27-ம் தேதி முதல் பண்புப் பயிற்சி என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தி வந்தது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து 104 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இந்தப் பயிற்சியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின ரின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.

தூத்துக்குடி சம்பவத்துக்கு நியாயமாக போராடுபவர்களை ஒடுக்கிவிட்டு, இன மற்றும் மதக் கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிப்பதா என்றும், அதிமுக அரசை விமர்சித்தும் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுத லைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சில அமைப்பினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலத்தின்போது கருப்புக் கொடி காட்டத் திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் உள வுத்துறை போலீஸார் உஷார் படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கலவரக்காரர்களை விரட்டி அடிக்கப் பயன்படுத்தும் வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தினர்.

காஞ்சிபுரம் மண்டித் தெரு வில் புறப்பட்ட ஊர்வலம் காமாட்சி அம்மன் கோயில் வழியாக பூக்கடை சத்திரத்தை வந்தடைந்தது. ஊர்வலத்துக்கு இயக்கத்தின் கோட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். காஞ்சி தலைவர் கோதண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.