அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவரது இரண்டாவது மகன் செந்தில்குமாருக்கு நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனை வரும் நலுங்கு வைப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மண்டபத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் பட்டு சேலை ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பணம், பட்டு சேலையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இதையறிந்த மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை உறவினர் ஒருவர் அரியலூர் கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு செந்துறையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடை பெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும் போலீசார் நட வடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறினார். இதுகுறித்து உரிய விவரங்களை அனுப்பி வையுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். கலெக்டரிடம் புகார் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங் களில் பரவி வருகிறது.