தம்மை அச்சுறுத்துவதற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: தஞ்சாவூரில் கடந்த 10-ம் தேதி இரவு நான் தாக்கப்பட்ட செய்தி குறித்து, சட்டப்பேரவையில் பதில் அளித்த முதல்வர், மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், நான் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், நான் கீழே விழுந்தேன் என்றும், என் கையில் இருந்த கைப்பையை அந்த நபர்கள் பிடுங்கிச் சென்றதாகவும், இதே நபர்கள் சென்று அந்தப் பகுதியில் வேறொருவரிடம் வழிப்பறி செய்துள்ளதாகவும் கூறினார்.

நான் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்து வந்த நபர், என் கையைப் பிடித்து இழுத்து என்னை 2 முறை கீழே தள்ள முயன்றார். 3-வது முறையாக அந்த நபர் மூர்க்கத்தனமாக என் கையை ஆவேசத்துடன் பிடித்து கீழே தள்ளி உருட்டி விட்டார்.

நான் அமர்ந்திருந்த வண்டியை ஓட்டி வந்த சீனிவாசன், வண்டியை நிறுத்திவிட்டு என்னைத் தூக்கிவிட்டார். நான் உடனே அருகில் உள்ள தெற்குக் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் செய்துவிட்டு, மருத்துவமனையில் சேர்ந்தேன்.

பின்னர்தான் என் கைப்பை காணாமல் போனது தெரியவந்தது. எனக்கு ஆபத்து உண்டாக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் அவர்கள் என்னைத் தாக்கியதாக ஊகிக்கிறேன். அரசியல் மற்றும் இயக்கச் செயல்பாடுகளில் எனக்கு எதிராக உள்ளோர் என்னை மிரட்டி அச்சுறுத்துவதற்காகவும், இதன்மூலம் மற்ற போராட்டக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என எண்ணுகிறேன்.

உண்மைக் குற்றவாளிகளைக் போலீஸார் கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்புலத்தின் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மணியரசன் மீதான தாக்குதலைக் கண்டித்து தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.