திண்டுக்கல்- தாடிக்கொம்பு ரோட்டில் செரோஜ்ராம் (வயது35) என்பவர் பைப் கடை வைத்துள்ளார். இவர் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், நான் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரவணன் (41), சீலப்பாடி ஊராட்சி பொருளாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் தங்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு நிதி தருமாறும் கூறினர்.

தற்போது பணம் இல்லை என கூறியதற்கு மாதம் மாதம் எங்களுக்கு மாமூல் தர வேண்டும் என மிரட்டியதாக கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், தங்கள் கட்சி பொதுக்கூட்டத்திற்காக நிதி கேட்டு சென்றதாகவும், அப்போது அங்கு வந்த பி.ஜே.பி., இந்து முன்னணி நிர்வாகிகள் எங்கள் பகுதியில் வந்து எப்படி நிதி கேட்கலாம் என மிரட்டி தாங்கள் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கியதாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.