தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மே மாதத்தில் இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களின் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் பெற்றோர் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். டிபிஐ வளாக விற்பனை கவுன்ட்டரில் முதல் நாளில் 1,650 பேர் பிளஸ் 1 புத்தகங்களை வாங்கியுள்ளனர். இந் நிலையில், 2-வது நாளான நேற்றும் டிபிஐ வளாகத்தில் பிளஸ் 1 புத்தகம் வாங்க பெற்றோர் கூட்டம் அலை மோதியது. பிளஸ் 2 புத்தக விற்பனை கவுன்ட்டரிலும் பிளஸ் 1 புத்தகங்களே விற்பனை செய்யப்பட்டன.

புத்தகம் வாங்க வந்த பெற்றோர் சிலர் கூறும்போது, “ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்து நின்றுதான் புத்தகம் வாங்கினோம். கூடுத லாக விற்பனை கவுன்ட்டர்களை அமைக்க பாடநூல் கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் தொகுதி – 2 புத்தகங் கள் கிடைக்கவில்லை என்றும் சிலர் குறை கூறினர். தமிழ் நாடு பாடநூல் கழக உறுப்பி னர் – செயலர் எம்.எஸ்.பழனி சாமி நேரில் சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தி புத்தக விற்பனையை விரைவுபடுத்தினார்.

பிளஸ் 1 பாடப் புத்தக விற்பனை தொடர்பாக பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மாக வழங்குவதற்காக 48 லட்சம் புத்தகங்களும், விற்பனை செய்வதற்காக 22 லட்சம் புத்தகங்களும் 47 தலைப்புகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மாணவர்களுக் கும் புத்தகங்கள் கிடைக்கும். பாடநூல் கழக விற்பனை மையங்கள், மண்டல அலுவலக கிடங்குகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களி டம் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். மேலும், பாட நூல் கழகத்தின் இணைய தளத்தை (www.textbookcorp.in) பயன்படுத்தி மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் ஆன்லைனில் பதிவுசெய்து புத்தகங்களை விரைவு தபால் அல்லது கூரியர் சேவை மூலமாக பெறலாம். புக்கிங் செய்த 2 நாட்களுக்குள் புத்தகங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் தொகுதி தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 2-வது தொகுதி ஜூன் இறுதியில் கிடைக்கும்.

இவ்வாறு டி.ஜெகந்நாதன் கூறினார்.