பார்வை மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தினமும் பயன்படுத்தும்  ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிய சற்று மேலெழும்பிய வகையில் பணம் அச்சிடப்பட்டிருக்கும். இதனால் பார்வையற்றவர்கள் தங்களது கையில் உள்ள பணத்தின் மதிப்பை யாருடைய உதவியும் இன்றி  தாங்களே அறிந்து கொள்கின்றனர்.

ஆனால் புதிதாக அச்சிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் நோட்டுகளை கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளதாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் புகார் கூறியுள்ளனர். அதிலும் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை  அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் இது தொடர்பான விதிமுறைகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பு கூறுகையில், சிறப்பு கருவி உருவாக்குவதை விட, ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் மாற்றம் செய்தாலே போதுமானது என தெரிவித்துள்ளது.