தவளக்குப்பம் ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் ரவி என்ற கோவிந்தராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமாக இடையார் பாளையம் பழைய பாலம் அருகே நிலம் உள்ளது. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்த நோணாங்குப்பம் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ரவி தனது நிலத்துக்கு சென்றார். அப்போது செந்தில்குமார் தனது நிலத்தின் வரப்பில் எப்படி நடந்து வரலாம்? என கேட்டு ரவியிடம் தகராறு செய்தார்.

இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரவியை சரமாரியாக தாக்கினார்.

இதில், ரவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்கள்.