சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அந்த இளம்பெண் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் குளித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்த பொது மக்கள் தாக்க முயன்ற போது ஒரு வாலிபர் நான் போலீஸ் என கூறி மிரட்டினார். இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், நான் வீட்டில் தனியாக இருந்த போது தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியை சேர்ந்த 3 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் மிரட்டியதுடன் என்னிடம் இருந்த 8 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். நான் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து ஜலகண்டாபுரம் போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

சின்னப்பம்பட்டியை சேர்ந்த 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது அந்த பெண் விபசாரத்தில் ஈடுபடுவதை தெரிந்து கொண்டனர்.

பின்னர் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய 3 பேரும் 3 ஆயிரத்து 500 ரூபாயை அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் தாங்கள் அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட 3 பேரும் அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அந்த இளம்பெண் செல்ல மறுத்தார்.

பின்னர் நேற்று காலை செல்போனில் தொடர்பு கொண்ட 3 பேரும் மீண்டும் அந்த இளம்பெண்ணை அழைத்தனர். அப்போதும் அவர்கள் சொன்ன இடத்திற்கு அந்த இளம்பெண் செல்லவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் நேற்று நேராக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது எப்போது கூப்பிட்டாலும் வருவேன் என்று தானே ரூ.3500 வாங்கினாய் ஏன் வரவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் சரியாக பதிலளிக்காததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அதில் ஒரு வாலிபர் நான் ஸ்பெ‌ஷல் போலீஸ் என்னையே ஏமாற்றுகிறாயா? என்று கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என்று கூறி மிரட்டியதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது