இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர்.