ஒடிசாவில் மாவோயிஸ்டு இயக்க தலைவர் குட்சா உசென்டி, விகால்ப், சசிபட்நாயக் மற்றும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இவர்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் அபய் தேவ் தாஸ்நாயக் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்.

அதைதொடர்ந்து இவரை சத்தீஸ்கரின் பாஸ்டர் போலீசார் தேடி வந்தனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடியாதபடி ‘அவுட் லுக்’ நோட்டீசு பிறப்பித்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப், பென்டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இவருக்கும் மாவோயிஸ்டு தகவல் தொடர்பு பிரிவினருக்கும் தொடர்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இவர் சமூக வலை தளங்கள் மூலம் மாவோயிஸ்டு கருத்துக்களை பரப்பி வந்தார்.

மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, நெதர்லாந்து, பெல்ஜியம், மெக்சிகோ, நேபாளம் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார். தெற்காசிய மாவோயிஸ்டு கமிட்டியினரை சந்தித்ததும் தெரியவந்தது.

இவர் கர்நாடக மாநில மாவோயிஸ்ட் இயக்க தலைவர் சகேத்ரஞ்சன் மீதான ஈர்ப்பு காரணமாக இந்த இயக்கத்தில் சேர்ந்ததாக கூறினார். சகேத்ரஞ்சன் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.