இரண்டில் ஒரு இஸ்லாமியர் பொய்யான பயங்ரவாத வழக்கில் குற்றம்சாட்டப்படலாம் என்ற பயத்தில் இந்தியாவில் உள்ளனர் என்று  ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

லோக்நிதி (Lokniti) மற்றும் காமன் காஸ் (Common Cause) ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் டெல்லி சமூக மேம்பாட்டு ஆய்வு மையத்துடன் இணைந்து 22 மாநிலங்களைச் சேர்ந்த 15,563 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியது. போலீசாரிடம் பொதுமக்கள் கொண்டுள்ள அச்சத்தைப் பற்றிய இந்த ஆய்வில் கவலை அளிக்கும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

47%க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் போலீசாரால் பிரிவினைக்கு உட்படும் அச்சத்தில் இருக்கிறார்கள். அதாவது, இரண்டில் ஒரு இஸ்லாமியர் புனையப்பட்ட பயங்கரவாதச் குற்ற வழக்குகளில் குற்றம்சுமத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

போலீசார் மதத்தின் பேரில் பிரிவினைப்படுத்துவதாக ஆய்வில் பங்குகொண்ட 26% இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர். இதே கருத்தை 18% இந்துக்களும் 16% சீக்கியர்களும் கொண்டுள்ளனர். 44% இந்தியர்கள் போலீசாரால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்

27% ஆதிவாசிகள் மாவோயிஸ்ட் குற்றங்களில் தொடர்புடையதாக புனையப்படலாம் என்று அஞ்சுகின்றனர். தலித் மக்களில் 35% பேர் இதே அச்சத்துடன் இருக்கிறார்கள்.

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 14.23% இஸ்லாமியர்கள் உள்ளனர். 2014ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அரசு தெரிவித்த புள்ளிவிவரம் ஒன்றில் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களில் 16.68% பேர் குற்றவாளிகள் என்றும் 21.05% பேர் விசாரணைக் கைதிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கண்ட ஆய்வு முடிவுகள் அரசின் புள்ளிவிவரத்துடன் இணைந்துப் பார்ப்பது அவசியமாகும்.