ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).

இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.

தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.

ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த வி‌ஷத்தை குடித்தனர்.

முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் வி‌ஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.

அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.

பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.

உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.