பாஜகவில் அத்வானியின் தற்போதைய நிலையை நினைத்து தாம் வருந்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி தனது அரசியல் குருவான அத்வானியை மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். அத்வானியை பாஜக மதிப்பதைவிட காங்கிரஸ் அதிகம் மதிப்பதாகவும் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தாலும் நாட்டிற்காக உழைத்தவர் என்கிற அடிப்படையில் அவர் மீது காங்கிரஸ் அதிக மரியாதை வைத்திருப்பதாகக் கூறினார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தரப்பில் கண்டனமும், விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான பி.வி.நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி போன்றோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டதா? என பாஜகவினர் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது வேதனையாக இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சித்துள்ளனர்.