மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் , தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியான இப்படம் வசூலைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கான ரசிகர் பட்டாளத்தையும் அதிகரிக்கச் செய்தது.

தற்போது நடிகர் விஜய் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் , சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. இருப்பினும் அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் பேசினார்.

அப்போது விஜய்யுடன் நடித்துவிட்டீர்கள், எப்போது தல உடன் நடிக்கப்போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி, “விரைவில் அந்த வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.