சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொண்டால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடும் என்பதால் திமுக புறக்கணித்துவிட்டதா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என குரல்கொடுக்க திமுக தயங்குவது ஏன்? என்றார். சட்டமன்றத்திற்கு செல்லாததன் மூலம், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான விவாதத்தை திமுக மழுங்கடித்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் யாருடைய தூண்டுதலிலும் பேசவில்லை என்றும், மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜராஜ சோழன், உலகமா தேவி சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.