உக்ரைனில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரஷ்யச் செய்தியாளர் உயிருடன் தோன்றியதுடன், கொலைச் செய்தி ஒரு நாடகம் எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அர்க்காடி பாப்செங்கோ செச்சன்யா போரின்போது ராணுவத்தில் பணியாற்றியவர். அதன்பின் ராணுவத்தில் இருந்து விலகிச் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

சிரியாவில் ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைன் தலைநகர் கீவில் வாழ்ந்து வந்தார். செவ்வாயன்று அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.

ரஷ்யாவுக்கு எதிராக அவர் எழுதி வந்ததால் ரஷ்ய உளவுத்துறையினரின் சதியாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய ரஷ்யா, இதுகுறித்து விசாரணை நடத்த உக்ரைனிடம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அர்க்காடி பாப்செங்கோ, உயிரோடு வந்து தனக்கு எதிரான கொலைச்சதியை முறியடிக்கவே, கொல்லப்பட்டது போன்று நாடகமாடியதாகத் தெரிவித்தார். கொலைச் செய்தி நாடகம் எனத் தெரியவந்ததும் தன் மீது விழவிருந்த பழி நீங்கியதே என ரஷ்யா நிம்மதியடைந்துள்ளது.