பாஜக எம்எல்ஏ ஒருவரே ,உ.பி இடைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கிண்டல் செய்து கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கைரானா தொகுதியில் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் களம் இறங்கிய தபசம் ஹசன் வெற்றி பெற்றார். இதுபோலவே, நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில், மார்ச் மாதத்திற்கு பிறகு பாஜக இரண்டாவது முறையாக சந்திக்கும் தோல்வி இதுவாகும். இந்த தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்தன. கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் இந்தமுறை சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்டரீய லோக்தளம் கடசிகளுடன் காங்கிரஸ் கரம் கோர்த்தன. இதனால், கைரானாவும், நுபுர்பூரும் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.

உ.பி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வியால் அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் தோல்வி, கட்சியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரையொருவர் கடுமையாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக கிண்டல் செய்து, ஹர்தோலி தொகுதி பாஜக எம்எல்ஏ சியாம் பிரகாஷ் முகநூலில் கவிதை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ‘‘அரசியல் சன்னியாசி ஒருவர் இருந்தாராம், அவர் பிரதமர் மோடியின் முயற்சியால் முதல்வரானார். ஆனால் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார். இன்று மக்களிடம் அடி வாங்கி நிற்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பாஜக நிர்வாகிகளிடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கருத்தை சிலர் ஆதரித்து வருகின்றனர். அதேசமயம் சிலர் சொந்த கட்சி முதல்வரை விமர்சிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுபற்றி பின்னர் பேட்டியளித்த சியாம் பிரகாஷ் ‘‘பாஜகவின் நலனுக்காகவே நான் இதனைக் குறிப்பிட்டேன். உத்தரபிரதேசத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாஜக தோல்விக்கு இதுவே முக்கிய காரணம். இதனால் தான், மக்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக உழைக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வெறும் பேச்சால் எதையும் சாதிக்க முடியாது’’ எனக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.