எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடி அலைக்கு எதிரான வெற்றியை  அளித்துள்ளது. இந்த முடிவுகள் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக எண்ணி காங்கிரஸ் கட்சி உற்சாகம் அடைந்துள்ளது.

நான்கு மக்களவைத் தொகுதிகள் பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக மகாராஷ்ட்ராவில் பால்கர் மக்களவைத் தொகுதியை மட்டும் கைப்பற்றியது. பெங்களூர் ஆர்.ஆர்.நகர் சட்டமன்ற தொகுதியில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் நடைபெற்றது.

இதன் முடிவுகளும் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் அத்தொகுதியை கைப்பற்றியது. பாஜகவின் தோழமைக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் போன்றவையும் பாஜகவுடன் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்த்தால் அதனை வீழ்த்துவது சாத்தியம்தான் என்ற புதிய தாரக மந்திரம் கிடைத்திருப்பதால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது.
ஒரு முடிவின் ஆரம்பம் இது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அனைத்துத் தரப்பிலும் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதற்கு மக்கள் பதிலடி தந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடி அரசின் மீதான மக்களின் கோபத்தை இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை நம்பாத மோடி அரசுக்கு கிடைத்த தோல்வி இது என்றும் மக்களை ஏமாற்றியதற்கு கிடைத்த தண்டனை என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு கிடைத்த அடி என்று தெலுங்குதேசம் கட்சி தெரிவித்துள்ளது. மக்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இந்த எச்சரிக்கை பாஜகவுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு பெரும் பாய்ச்சலுக்கு முன்பு இரண்டு அடி பின்னோக்கி போவது இயல்பு தான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.