திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  தென் ஆப்பிரிக்காவின், உலகின் தலைசிறந்த வீர்ர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனி இப்படிப்பட்ட 360டிகிரி சுற்றி சுற்றி அடிக்கும் வீரரைக் காண்பது அரிது. இவரது பீல்டிங், அணுகுமுறை, விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் ஏற்ற பெருந்தன்மை ஆகியவை டிவில்லியர்ஸை நிகரற்ற ஒரு வீரராகவே கருதத் தோன்றுகிறது.இந்நிலையில் ஆலன் டொனால்ட் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியதாவது:

6 மாதங்களுக்கு முன்பாகக்கூட ஏ.பி.டிவில்லியர்சிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது கூட உலகக்கோப்பையில் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாகவே இருந்தார்.

அதனால் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு என்று நான் நினைத்தேன். இப்போதுகூட தென் ஆப்பிரிக்க அணி வெல்லும் அணிகள் பட்டியலில் முக்கிய அணியாகும், ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லாமல் கஷ்டம், அவர் இருந்திருந்தால் பெரிய வாய்ப்பு.

ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் முடிவை நான் மதிக்கிறேன். தான் களைப்படைந்து விட்டதாக அவர் கூறினார். அவரது குடும்பம் இளம் குடும்பமாகும். அதனால் ஒருவேளை குடும்பம் முக்கியம் என்று அவர் நினைத்திருக்கலாம். எங்கள் அனைவருக்குமே இப்படி நடந்துள்ளது, எனவே அவரது முடிவை மதிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் அள்ளிக்கொடுத்தது ஏராளம், தன் மட்டையின் மூலம் ஏகப்பட்ட போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். அவரது அபாரத்திறமை, அந்த அனாயாச மட்டையடி, அவரது ஸ்டைல் ஆகியவற்றை இழக்கிறோம்.

ஆனால் அவர் எடுத்த முடிவு பெரிய அளவில் தன்னலமற்ற முடிவாகும். அவர் தலை நிமிர்த்தி நடக்கலாம், உச்சபட்ச பார்மில் இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். ஆட்டத்தில் ஒவ்வொன்றையும் அவர் சாதித்து விட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.