காவல் நிலையத்தில் சென்னையில் சரவணபவன் ஹோட்டலில் உணவருந்த வந்தவர்கள் விட்டுச் சென்ற 25 லட்சம் ரூபாய் பணம் ஒப்படைக்கப்பட்டது.

அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள சரவணபவன் ஹோட்டலில், நேற்று ஒரு இருக்கையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்ததை, ரவி என்ற சர்வர் பார்த்துள்ளார். அதை உணவக மேலாளர் பாலுவிடம் ரவி ஒப்படைத்தார். பையில் 25 லட்சம் ரூபாய் பணம் இருந்ததால், சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், உணவருந்த வந்த 2 பேர், பணப்பையை விட்டுச் சென்றது பதிவாகி இருந்தது.

இந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை தேடி நேற்றிரவு வரை யாரும் வரவில்லை. இதனை அடுத்து பணத்தை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேலாளர் பாலு, சர்வர் ரவி ஆகியோர், இன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணனிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர். அத்துடன், ஹோட்டலில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டன. பணத்தை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் சரவணன், பணத்தை ஒப்படைத்த நேர்மையைப் பாராட்டி, சர்வர் ரவிக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி, 15 ஆண்டுகளாக சர்வராக பணியாற்றினார். தற்போது, 25 லட்சம் ரூபாயை ஒப்படைத்த நேர்மைக்காக, சர்வராக பணியாற்றிய அதே கிளையில், ரவிக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வு அளித்துள்ளது சரவணபவன் நிர்வாகம். இதனிடையே 25 லட்சம் ரூபாய் பணத்தை விட்டுச் சென்றவர்கள் தற்போது அவரை அதனை தேடி உணவகத்திற்கு வரவில்லை.

மேலும் பணம் காணவில்லை என்று காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. இதனால் அந்த இருவரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளின்படி, பணத்தை விட்டுச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.