குழந்தை கடத்த வந்ததாக சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே  பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.

ஓசூர் அருகே உள்ள ஒன்னலவாடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மைதானத்தினருகே வடமாநில இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிராம மக்களில் சிலர் அந்த இளைஞரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர். மொழிபுரியாத நிலையில் அந்த இளைஞரை கைகால்களை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த அந்த இளைஞர் தாக்குதலில் சுயநினைவிழந்து விழுந்தார். இது தொடர்பான தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ஓசூர் போலீஸார் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள், இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்றனர். தனியாக செல்லும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அவ்வப் போது புகார்கள் எழுந்த நிலையில், குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பவேண்டாம் என போலீஸார் ஆட்டோ மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.